நாம் ஒருவர் அல்லது ஒரு தாவரமோ அல்லது விலங்கோ உயிருள்ளதா என்று எப்போது சொல்கிறோம்? அது தானாக வளர வேண்டும், பெருக வேண்டும், தன் சக்தியைத் தானே உருவாக்க வேண்டும். இதுவே உயிரியலில் உயிரின் அடிப்படை வரையறையாக உள்ளது. ஆனால் இயற்கை எப்போதும் இந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. வைரஸ்கள், உதாரணமாக, மேலே பட்டியலில் உள்ள எந்த செயலையும் தன்னால் செய்ய முடியாமல், ஓம்புயிரியின்(host) உதவியால் மட்டுமே செயல்பட முடியும் என்பதனால், பெரும்பாலும் “உயிரில்லாதவை” என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் அவைகளே உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் ஒரு உயிரில்லை எனக் கூறினாலும், அது உலக் வாழ்வியலையே மாற்றிவிட்டது.

இப்போது, அதைவிடச் சிக்கலான, புதிரான உயிரணுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுகுனார்ச்சேயம் மிராபில் (Sukunaarchaeum mirabile) என்ற இந்தச் சிறு உயிரணு, வைரஸா, உயிரணுவா, அல்லது இரண்டும் சேர்ந்து உருவானதா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கிடையாது. இது தன் வளர்ச்சிக்குத் தேவையான பல செயல்களை ஓம்புயிரி மூலம் பெறுகிறது, வைரஸ்களைப் போன்று. ஆனால் அதே நேரத்தில், தன் சொந்த ரிபோசோம்கள் (Ribosomes) மற்றும் தூதனரியை (messenger RNA) உருவாக்கும் திறனும் இதில் இருக்கிறது. ஒரு உயிரணு தன்னை நடத்த, வளர, திருத்த, பாதுகாக்க, புரதங்களை (proteins) தேவைப்படுகிறது. அந்த புரதங்களை உருவாக்குவதற்கு DNAவில் உள்ள உத்தரவுகளை முதலில் தூதனரி (messenger RNA) ஆக மாற்ற வேண்டும். பிறகு அந்த தூதனரியை ரிபோசோம் எனும் “புரத உற்பத்தி இயந்திரம்” வாசித்து, தேவையான புரதங்களை உருவாக்குகிறது. சுருக்கமாகச் சொன்னால்:
DNA –> mRNA –> Protein
(தகவல் –> தூதுவர் –> செயல்)
வாழும் எல்லாம் உயிர்களும், DNAவில் உள்ள உத்தரவை வாசித்து, அந்தக் கட்டளையை செயல்படுத்தித் புரதத்தை உருவாக்கின்றது. அதற்காகதான் தூதனரி மற்றும் ரிபோசோம்கள் உயிரின் இதயம் போல தேவைப்படுகின்றன. இது வைரஸ்களுக்கு சாத்தியமல்ல.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் DNA எனும் மரபணுத் தகவலைக் கொண்டிருக்கின்றன. அந்த DNA-வில் உள்ள base pairs (அல்லது தானியங்கள்) தான் அந்த உயிரின் அனைத்து தகவல்களையும் வைத்திருக்கும். ஒரு உயிரியின் மிகவும் அடிப்படை அறிவியல் கட்டமைப்பை புரிந்து கொள்ள, அந்த DNAயின் அளவு (எத்தனை base pairs உள்ளன) முக்கியமாகும். இதன் மரபணு அளவு, மனிதன் உட்பட பெரும்பாலான உயிரிகள் வைத்திருக்கும் அளவுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவானது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதரின் மரபணு சுமார் 320 கோடி base pairs கொண்டிருக்கும்; பொதுவான பாக்டீரியாக்கள் சுமார் 30 லட்சம் base pairs வைத்திருக்கின்றன; மற்ற தொன்பாட்டீரியங்களும் குறைந்தபட்சம் 4.9 லட்சம் base pairs வைத்திருப்பதை நாம் அறிவோம். ஆனால் Sukunaarchaeum mirabile வெறும் 2.38 லட்சம் base pairs மட்டுமே கொண்டுள்ளது. அதாவது அதன் சொந்த குழுவிலேயே உள்ள மற்ற உயிரிகளைவிட பாதியாக சுருக்கப்பட்ட மரபணுவை வைத்துள்ளது. இதுவே இதனை மிகவும் சுருக்கப்பட்ட, ஆனால் செயல்படக்கூடிய உயிரி எனும் வகையில் தனிச்சிறப்புடையதாக மாற்றுகிறது. இது தன்னை பெருக்குவதற்குத் தேவையான மிக அடிப்படை இயந்திரங்களை மட்டும் வைத்திருப்பதுடன், சக்தி, ஊட்டச்சத்து, வளர்ச்சி போன்ற அனைத்து பிற தேவைகளையும் முழுமையாக தனது ஓம்புயிரியிடமிருந்து பெறுகிறது. இதை நாம் ஒரு புத்தகத்துடன் ஒப்பிட்டு நினைத்தால், மனிதரின் மரபணு என்பது சுமார் 3,200 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் நூல் போன்றது; பாக்டீரியாக்கள் சுமார் 300 பக்கங்கள் கொண்டவை. ஆனால் Sukunaarchaeum mirabile என்பது வெறும் 23 பக்கங்கள் கொண்ட ஒரு சிறு புத்தகம். ஆனாலும்… அதிலே அதற்குத் தேவையான முக்கியமான கட்டளைகள் அனைத்தும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன! இந்த உயிரி தன்னை நகலெடுத்து பெருக்குவதில் மட்டுமே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறது. வளர்ச்சிக்கான வழிமுறைகள், சக்தி உருவாக்கம், ஊட்டச்சத்து உற்ப்பத்தி என்று எதுவும் இதில் இல்லை. இதையெல்லாம் ஓம்புயிரி மூலம் பெற வேண்டும். இது ஒரு முழுமையாக செயல்படக்கூடிய உயிரணு அல்ல; ஆனால் வைரஸாகவும் இதை வகைப்படுத்த முடியாது. இது போன்ற உருவாக்கங்களை இயற்கை எவ்வாறு உருவாக்குகிறதென்று நினைக்கும் போது, பரிணாமத்தின் ஆழத்தை நம்மால்புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த உயிரின் கண்டுபிடிப்பு ஒரு திட்டமிடப்பட்ட ஆராய்ச்சியின் விளைவு அல்ல. கடலில் வாழும் ஒரு மிதவைவாழியான Citharistes regius(ஒரு வகை பாசி) எனும் உயிரியின் மரபணுவை ஆய்வு செய்தபோது, ஒரு வேறுபட்ட மரபணு துண்டு தெரியவந்தது. அதன் பின்னணியை ஆராய்ந்தபோது தான் இது ஒரு தொன்பாட்டீரியம் (Archaea) எனும் தொன்மையான உயிரினக் குழுவைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டது. இதிலிருந்தே நம்மைப் போன்ற மெய்க்கருவுயிரிகள் (Eukaryotes) பிறந்தன எனக் கருதப்படுகிறது..
Sukunaarchaeum mirabile நமக்குச் சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால் இயற்கை நம் புரிதல்களுக்கும் வரையறைகளுக்கும் அப்பாற்பட்டது. இத்தகைய உயிரிகள் கடலிலும் நிலத்திலும், வெவ்வேறு சூழ்நிலைகளிலும், மேலும் பல சூட்சும வாழ்வுகளில் மறைந்திருக்கும் வாய்ப்பு அதிகம். பல்வேறு உயிரினங்களுக்கு இடையேயான தொடர்புகளையும், பல்லுரிய அமைப்புகளையும் ஆராயும் முயற்சிகள் மேற்கொள்ளும்போது, படிவளர்ச்சியின் (evolution) பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தில், குறைந்தபட்சம் சில வரிகளாவது நாம் வாசிக்க இயலும் என்பதை இத்தகைய கண்டுபிடிப்புகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
Original Paper: https://www.biorxiv.org/content/10.1101/2025.05.02.651781v1

Leave a Reply