மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டம், பார்னேர் தாலுக்காவில் குகடி நதிக்கரையில் நிகோஜ் கிராமம் அமைந்துள்ளது. இது புனேயிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மக்களால் பெரிதாக அறியப்படாத இந்த கிராமம், இந்திய புவியியலின் ஒரு முக்கிய இயற்கைச் சிற்பக்கூடமாக திகழ்கிறது. குகடி நதியின் கரைகள் எரிமலைப்பாறையால் ஆனவை. ஆற்றின் இரு கரைகளிலும், பாறைகளின் மேல் வியத்தகு வட்ட வடிவ பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை, இயற்கையின் பொறுமையுடனும், தொடர்ச்சியான செயலாற்றலுடனும் நிகழ்ந்த நுண்ணிய வேலைப்பாடுகளால் உருவானவை.

இந்த பள்ளங்கள் ஆழமாகவும், சில சமயங்களில் 20 அடி வரை ஆழம் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. மேலிருந்து பார்வையிட்டால், இவை பூமியின் இயல்பான மேற்பரப்பைப் போல இல்லாமல், வேற்றுகிரகத் தரையை நினைவூட்டும். இந்தக் கட்டமைப்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் உருவாகத் தொடங்கியவை.

மழைக்காலங்களில் வேகமாக பாயும் குகடி நதி, அதில் கலந்து வரும் சிறிய கற்கள் மற்றும் மண்துகள்கள், பாறையின் மேற்பரப்பில் சுழன்று உரசுகின்றன. இந்தச் சுழற்சி இயக்கத்தில் நீரின் வேகமும், கற்களின் தாக்கமும் இணைந்து அரிப்பு (abrasion) செயல்முறையை உருவாக்குகின்றன. தொடக்கத்தில் சிறிய குழியாகத் தோன்றும் இடம், காலப்போக்கில் பெரும் பள்ளமாக மாறுகிறது. “எறும்பு ஊற கல்லும் தேயும்” என்ற பழமொழிக்கு நிகோஜ் பள்ளங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு எறும்புக்கு பதிலாக சிறு கற்கள், நீரின் துணையுடன் பெரிய பாறைகளை மெதுவாகச் செதுக்கின்றன.
எரிமலைப்பாறை என்பது மிகக் கடினமான பாறை வகையாகும். பொதுவாக, இவை இயற்கையாக மாறுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனால் நிகோஜில், நீர், கல் மற்றும் நேரம் என்ற மூன்று சக்திகளும் சேர்ந்து கடின பாறையையே மென்மையடையச் செய்து, அரிய புவியியல் அமைப்பை உருவாக்கியுள்ளன. இது இயற்கையின் சிற்பக் கலைத்திறனை நினைவூட்டும்.


இந்த பள்ளங்கள் வெறும் பாறையின் மேல் காணப்படும் வடிவங்கள் மட்டுமல்ல. இவை கடந்த காலத்தில் இப்பகுதி எப்படியிருந்தது என்பதை சுட்டிக்காட்டும் தொல் புவி தட்பவெப்பநிலை சான்றுகளாகும். இன்று குகடி நதியின் ஓட்டம் இத்தகைய ஆழமான பள்ளங்களை உருவாக்க முடியாது என்பதிலிருந்து, இப்பகுதி ஒருகாலத்தில் மிகுந்த மழைபெற்ற பகுதியாய் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஊகிக்கலாம்.

நிகோஜ் கிராம மக்கள், இந்த பள்ளங்கள் கந்தோபா தேவனின் திரிசூலால் உருவானவை என்று நம்புகின்றனர். மற்றொரு பாரம்பரியக் கதையின் படி, மலகங்கா தேவி தனது கோபத்தால் குகடி நதியின் ஓட்டத்தை மாற்றியபோது, அதனால் ஏற்பட்ட தாக்கம் இந்த பாறைகளில் பள்ளங்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. நதிக்கரையிலுள்ள மலகங்கா கோவில், இந்த நம்பிக்கைகளின் அடையாளமாக இன்றும் நிலவுகிறது.
இவ்வளவு அறிவியல், பாரம்பரிய முக்கியத்துவம் கொண்ட இடம், இன்னும் பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும். விளக்கக் குறிகள், பாதுகாப்பான நடைபாதைகள், மற்றும் தகவல் பலகைகள் இல்லாததால், இது பலருக்குத் தெரியாத ஒரு இயற்கைச் சின்னமாகவே இருந்து வருகிறது. இவ்விடம் புவியியல் பாரம்பரிய இடமாக (Geoheritage Site) அறிவிக்கப்பட்டு, அதன் சிறப்பை அறிந்துகொள்ளும் பலருக்கும் கல்வியும் அதிசயமும் தரக்கூடியதாயிருக்கிறது.
நிகோஜ் பள்ளங்கள் நமக்குச் சொல்லும் செய்தி மிக தெளிவானது, கடினமான பாறையையும் இயற்கையின் பொறுமையான விடாமுயற்சி மாற்றும் சக்தி கொண்டது. இங்கு நீர், கல் மற்றும் காலம் சேர்ந்து எழுதிய ஒரு மௌனக் காவியம். அந்த காவியத்தை நாம் கேட்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும், பாதுகாக்க வேண்டும். அதுவே நம் பொறுப்பு.

Leave a Reply